Tuesday, February 8, 2011

புதிய ஸ்பெக்ட்ரம் முறைகேடு? - இரண்டாம் பாகம்

நேற்று என்னுடைய இந்த பதிவில் ISRO நிறுவனத்திற்கும், தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்திற்கும் இடையில் உருவான முறைகேட்டிற்கு வாய்ப்பிருக்கக் கூடிய ஒப்பந்ததைப்  பற்றி எழுதியிருந்தேன். இன்று நாளிதழ்களில்  இதைப் பற்றி சில மேலதிகத் தகவல்கள் வந்துள்ளன.

தேவாஸ் நிறுவனம் ஹிந்து பத்திரிகை வெளியிட்ட செய்தி அறிக்கையை மறுத்து இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. எங்களுக்கு ஏர்டெல், BSNL ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டது போல   அலைக்கற்றை உரிமம் எதுவும் வழங்கப்படவில்லை. ட்ரான்ஸ்பாண்டருடன் 70 MHZ அலைவரிசையையும் சேர்த்துக் குத்தகைக்கு எடுத்திருக்கிறோம். ட்ரான்ஸ்பாண்டரும், அலைவரிசையும் ISRO பெயரில்தான் உள்ளது என்கிறது.

இதில் ஒரு அடிப்படையான கேள்வி என்னவென்றால் குத்தகை என்பது ஒரு வருடம், இரு வருடமாக இருந்தால் சரி. ஆனால் இருபது வருடம் எனும்போது அது நிறுவனத்தின் சொத்து போலல்லவா ஆகி விடுகிறது? அப்படி இருக்கும்போது ISRO இந்த அலைக்கற்றைக்குத் தனியே சரியான விலையை ஏன்  நிர்ணயிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.

மத்திய அரசாங்கமும், ISRO வும் இந்த ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அறிவித்துள்ளது.

மத்திய கணக்குத் தணிக்கைக் குழு (CAG) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கணக்குத் தணிக்கை பூர்வாங்க நிலையில்தான் உள்ளது. இரண்டு லட்சம் கோடி இழப்பு என்பது ஒரு தோராயமான கணக்கு. இறுதி அறிக்கை வெளியிடும்போது அனைத்துத்  தகவல்களும் துல்லியமான முறையில் வெளியிடப்படும் என்று சொல்லியிருக்கிறது.

பா.ஜ.க வும், கம்யூனிஸ்ட்களும் இந்த விவகாரத்தையும்  பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணையில் இணைக்க வேண்டுமென்று குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த வருட நிதிநிலை அறிக்கைக்  கூட்டத் தொடரை இந்த  விவகாரம்  வீணடித்து விடுமென்றே தோன்றுகிறது.

Monday, February 7, 2011

புதிய ஸ்பெக்ட்ரம் முறைகேடு?

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் பெரிதாக வெடித்திருக்கும் இந்நேரத்தில் அதை விடப் பெரிய அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு  ஒன்றை மத்திய கணக்குத் தணிக்கைக் குழு (CAG) விசாரிக்க ஆரம்பித்துள்ளது. முதல்கட்ட மதிப்பீட்டின்படி அரசுக்கு ஏற்பட்ட இழப்பு இரண்டு லட்சம் கோடி எனப்படுகிறது. இது  2G முறைகேட்டில் சொல்லப்படும்  1.76 லட்சம் கோடி இழப்பையும் தாண்டி விட்டது. இந்த முறைகேட்டைப் பற்றிய விவரங்களை  ஹிந்து பத்திரிக்கையின்  பிசினஸ் லைன் நாளிதழ் முதன்முறையாக ஆராய்ந்து வெளியுட்டுள்ளது. போபர்ஸ் முறைகேட்டையும் முதலில் வெளிக்கொண்டு வந்தது ஹிந்து பத்திரிக்கைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இப்போது விவரங்களைப் பார்ப்போம். ISRO எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இந்திய அரசாங்கத்தின் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளுக்காக செயற்கைகோள்கள் செலுத்துவது  மட்டுமல்லாமல் தொலை தொடர்புத் துறையில் இயங்கும்   தனியார் நிறுவனங்களிடமும் கட்டணம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு செயற்கைகோள்களின் சில ட்ரான்ஸ்பாண்டர்களை ஒதுக்கும். அவர்கள் அதைப் பயன்படுத்தி தகவல் தொடர்பு சேவைகளை அளிக்கலாம். தனியார்களுக்கு சேவை அளிக்கும் ISRO வின் பிரிவு  ஆண்ட்ரிக்ஸ் என்ற பெயரில் தனி நிறுவனமாக இயங்குகிறது. இந்நிறுவனங்கள் இந்திய அரசாங்கத்தின் விண்வெளித் துறையின் கீழ் இயங்குகின்றன. விண்வெளித் துறை என்பது நமது பிரதமர் மன்மோஹன் சிங்கின்  நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் துறை.
 
ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் தேவா'ஸ் மல்டிமீடியா என்ற தனியார் நிறுவனத்தோடு 2005 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போட்டது. அந்த ஒப்பந்தப்படி தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்துக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் GSAT-6, GSAT-6A என்ற இரு செயற்கைக்கோள்களைச் செலுத்தும். அதில் ஒவ்வொரு செயற்கை கோளிலும் பத்து ட்ரான்ஸ்பாண்டர்கள் இந்நிறுவனத்தின் செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்படும். இதற்காக தேவாஸ் மல்டிமீடியா நிறுவனம் ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்திற்கு முதல் கட்டமாக நான்கு கோடி டாலரும் செயற்கை கோள்கள் ஏவப்பட்டபின் இருபத்தைந்து கோடி டாலரும் கொடுக்கும். இந்த செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இரு நிறுவனங்களுக்கும் பங்கு உண்டு. ஆனால் இந்திய விண்வெளித் துறையின் பங்குத் தொகை  எவ்வளவு என்று தெரியவில்லை. செயற்கைக்கோள் ஏவப்பட்டபின் தேவா'ஸ் மல்டி மீடியா மேலும்   வர்த்தக முதலீடுகள் செய்யும்.
 
இந்த தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகர் முன்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் அறிவியல் செயலாளராக பணி புரிந்தவர். சென்ற வருடம் வரை இந்தியாவில் ஒலிபரப்பப்பட்ட வோர்ல்ட் ஸ்பேஸ் செயற்கைக் கோள் வானொலியின் நிர்வாக இயக்குனராக இருந்தவர். தேவா'ஸ் மல்டி மீடியா நிறுவனத்தில் ஜெர்மன் அரசு தொலைதொடர்பு நிறுவனத்திற்கு 17 விழுக்காடு பங்குள்ளது.
 
இந்நிறுவனம் ட்ரான்ஸ்பாண்டர்  குத்தகைக்கு  வாங்கி என்ன செய்யப் போகிறது?  செயற்கைக்கோள் வழியே அகல உயர் அலைவரிசை (broadband) சேவைகளை அளிக்க இருக்கிறது. உதாரணமாக இந்திய ரயில்வேயிடம் செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தின்படி செயற்கைக்கோள் மூலம் இரயில்களைக்  கண்காணித்து ரயில்கள் மோதிக் கொள்வதைத் தவிர்க்கும் தொழில் நுட்பம் தன்னிடம் உள்ளது என்று கூறுகிறது. மேலும் எதிர்காலத்தில் கம்பியில்லா இணைய  சேவையிலும் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளது.
 
இந்நிறுவனம் ட்ரான்ஸ்பாண்டரை  குத்தகைக்கு  எடுப்பதுடன் விட்டிருந்தால்  எந்த பிரச்சினையும் இல்லை. ஒப்பந்தப்படி இந்நிறுவனத்திற்கு இருபது வருடங்களுக்கு S-band எனப்படும் அதி உயர் அலைவரிசை 70 MHZ அளவுக்குக் கிடைக்கும். இந்த அலைவரிசை   மூன்றாம் தலைமுறை உலா தொலைபேசி  அலைக்கற்றையை   விடப்   பெரிய அலைவரிசையில் அமைந்துள்ளது. மூன்றாம் தலைமுறை ஏலத்தில்  15 MHZ ஏலம் விட்டதற்கே அறுபத்தி ஏழாயிரம் கோடி வருமானம் கிடைத்தது.சமீபத்தில் BSNL மற்றும் MTNL ஆகிய  அரசு நிறுவனங்கள் 20 MHZ S-band அலைக்கற்றையை  பன்னிரண்டாயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருந்தது. இவ்வளவு மதிப்பு மிக்க அலைக்கற்றை  70 MHZ அளவிற்கு தேவா'ஸ் மல்டி மீடியா நிறுவனத்திற்கு மட்டும் ட்ரான்ஸ்பாண்டருக்காகக்   கொடுத்த  குத்தகைத் தொகை  ஆயிரம் கோடியை மட்டும் பெற்றுக் கொண்டு  ஒதுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இதுபோன்று ஒதுக்கப்படும் அலைக்கற்றையை வேறு யாருக்கும் மேற்கொண்டு விற்கக்கூடாது என்ற விதியும் ஒப்பந்தத்தில் இல்லை.
 
இது போதாதென்று சொன்ன நேரத்தில் செயற்கைக்கோளைச்   செலுத்தாவிடில் இந்திய விண்வெளி  ஆராய்ச்சி நிறுவனம்  அந்நிறுவனத்திற்கு அபராதம் செலுத்த வேண்டுமென்பது ஒப்பந்தம். இந்திய விண்வெளி  ஆராய்ச்சி நிறுவனம் ஒப்பந்தம் போட்டு ஐந்து ஆண்டுகள் ஆகியும் வழக்கம் போல சொன்னபடிச் செயற்கைக்கோளைச்   செலுத்தாதால் இப்போது கையைப் பிசைந்து கொண்டுள்ளது. தனக்குப் பதிலாகச் செயற்கைக்கோளைச் செலுத்துமாறு ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்திடம் பேரம் பேசி வருகிறது. இந்நிறுவனத்திற்கு ஏற்கனவே பரிசோதனை செய்து பார்க்கவும் சிறிது அலைக்கற்றை வழங்கப்பட்டுள்ளது.
 
இப்போது மத்திய கணக்குத் தணிக்கைக் குழு சுமத்தும் குற்றச்சாட்டுகள் என்ன?
 
(1) மதிப்பு மிக்க அலைக்கற்றை வெளிப்படையான ஏல முறை இல்லாமல் விற்கப்பட்டுள்ளது.
(2) பிரதமர், மத்திய அமைச்சரவை ஆகியவற்றுக்கு ஒப்பந்தத்தின் முழு விவரங்கள் சொல்லப்படவில்லை.
(3) தனியார் தரும் சொற்பத் தொகைக்காக் பொது நிதியை வைத்து செயற்கைக்கோள்  தயாரிப்பது.
(4) இந்நிறுவனம் இந்த அலைக்கற்றையை  வேறு யாரிடமாவது கைமாற்றி விடாமல் இருக்க ஒப்பந்தத்தில் வழிவகை இல்லாதது.
 
இவ்விவகாரம் வெளிவந்தவுடன் மத்திய அமைச்சரவை இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு இந்திய விண்வெளி  ஆராய்ச்சி  நிறுவனத்திற்கு  அறிவுறுத்தியுள்ளது. இந்திய விண்வெளி  ஆராய்ச்சி நிறுவனத்தின் கருத்திற்காக மத்திய அரசாங்கம் காத்துக் கொண்டிருக்கிறது.
 
இந்தியாவில் மத்திய தணிக்கைக் குழு மட்டும்தான் தன் வேலையை ஒழுங்காகச் செய்கிறது  போலிருக்கிறது.

Friday, February 4, 2011

இரயில் கூரையில் பயணிகள்

நாமெல்லாம் விஜயகாந்த் படங்களில் இரயில் மேல் சண்டைக்காட்சிகள் பார்த்திருப்போம். ஓடும் இரயில் கூரையில் மனிதர்கள் பயணம் செய்வதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இது பீஹாரில் சர்வ சாதாரணமாகக் காணக் கிடைக்கும் காட்சி.

என் தந்தை தெற்கு இரயில்வேயில் வேலை செய்ததால் ஒவ்வொரு வருடமும் வெளியூர்களுக்குச் சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். 1993 ஆம் ஆண்டு நான் சிறுவனாக இருந்தபோது நேபாள நாட்டுக்குச் சென்றபோது கொல்கத்தாவிலிருந்து பீஹார் வழியே செல்ல நேரிட்டது.

தமிழகத்தில் நாம் பொதுவாக இரயில்கள் சுத்தமாகப் பராமரிக்கப் படுவதில்லை என்று குறை கூறுவோம். பீஹாரில் இன்னும் ஒரு படி மேலே போய் பல பெட்டிகளில் விளக்கு வெளிச்சமே இல்லை. இருட்டான பெட்டிகளில் காடு போன்றிருக்கும் பாதையில் பயணம் செய்வது திகிலான அனுபவம். சரி பெட்டிக்குள்தான் வெளிச்சம் இல்லை என்று வழியில் வரும் ஊர்களில் பார்த்தால் பல ஊர்கள் இருளடைந்து காணப்பட்டன. அதைப் பற்றி விசாரித்தபோது பீஹாரில் பல கிராமங்களில் மின்வசதி கிடையாதென்றும் இருக்கும் இடங்களில் கூட ஒரு நாளில் பாதி நேரம்தான் மின் வினியோகம் இருக்கும் என்றும் அறிந்தோம். நிதீஷ் குமார் ஆட்சிக்கு வந்த பிற்பாடுதான் மின் வினியோகத்தில் சிறிது முன்னேற்றம் இருப்பதாகத் தெரிகிறது.

மேலும் பீஹார் மக்களில் பலர் அவ்வளவு பொது ஒழுக்கம் கடை பிடிப்பவர்களாக இல்லை. இரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறிக் கொண்டு முன்பதிவு செய்தவர்கள் இருக்கையைப் பயன்படுத்த விடாமல் தொல்லை செய்வார்கள். பயணச்சீட்டு பரிசோதகரிடம் புகார் செய்தாலும் பயனில்லை. அவரையும் மிரட்டுவார்கள். ஓரளவிற்கு மேல் பேச முடியாமல் அவரும் நம்மைக் கை விட்டு விட்டுக் கிளம்பி விடுவார். இவர்களில் பயணச் சீட்டு வாங்காமல் பயணம் செய்பவர்களே அதிகம். கேட்டால் இது அரசாங்கத்தின் வண்டி. நான் ஏன் காசு கொடுக்க வேண்டுமென்பார்கள்.

உச்ச கட்டமாக சிறு கிராமங்களிலிருந்து சிறு நகரங்களுக்குப் பயணிக்கும் பலர் தங்கள் மிதிவண்டிகளை இரயிலின் ஜன்னல்கள் இடையே கயிற்றைப் போட்டுக் கட்டி விட்டு இரயிலின் கூரைக்கு இடம் பெயர்ந்து விடுவர். பல தடங்கள் மின்மயமாக்கப் படாதது அவர்களுக்கு வசதியாக இருந்தது. இவர்களுக்கு மேற் கூரையில் போய் தேநீர் விற்கும் வியாபாரிகளும் உண்டு

இந்த கூரையில் பயணிக்கும் பழக்கம் பீகாரில் மட்டும்தான் உண்டு என்று எண்ணியிருந்தேன். உத்தர பிரதேசத்தில் இரு நாட்களுக்கு முன்  ஜம்முதாவி விரைவு வண்டியில்  நடந்த ஒரு விபத்து என் நினைப்பைத் தகர்த்தது. புது தில்லியிலிருந்து லக்னோ செல்லும் வழியிலுள்ள ரோசா எனும் இடத்தருகே கூரையில் பயணம் செய்த பதினான்கு இளைஞர்கள் எதிர்ப்பட்ட  பாலத்தில் தலை மோதி மரணமடைந்தனர். கூரையில் பயணம் செய்த பலர் பரேலியில் நடந்த இந்திய-திபெத் எல்லைக்    காவல் பணிக்காகத் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள். இரயிலில்  இடமில்லாமல் பலர் என்ஜின் முன்புறம் மற்றும் Gaurd பெட்டி ஆகியவற்றிலும் தொற்றிக் கொண்டு பயணம் செய்துள்ளனர்.



ஹிந்து நாளிதழில் இரு நாட்களுக்கு முன் இச்செய்தியைப் பார்த்தபோது ஒரு புறம் வருத்தமாக இருப்பினும் இன்னொரு புறம் இது இவ்வளவு நாள் நடக்காமல் இருந்ததே அதிசயம் என்று தோன்றியது.