Saturday, December 18, 2010

ரத்த சரித்திரம் - திரிக்கப்பட்ட உண்மைகள்

ரத்த சரித்திரம் என்ற பெயரில் ராம் கோபால் வர்மா ஒரு பழிவாங்கல் கதையைப் படமாக எடுக்கப் போகிறார் என்றவுடன்  முதலில் ஆயாசமாக இருந்தது. பின்னர் அது ஆந்திராவில் நடந்த உண்மைக் கதை என்றவுடன் சுவாரசியம் அதிகரித்தது.

பழி வாங்குதல் ஒரு பரிசுத்தமான உணர்வு என்ற மகாபாரத  வாசகம்தான் படத்தின் ஒரு வரிக் கதை.

நான் இப்படத்தின் ஹிந்தி-தெலுங்கு முதல் பாகத்தைப் பார்க்கவில்லை. ஆனால் அதை ஈடுகட்டும் விதத்தில் இருபதே நிமிடத்தில் அதைச் சுருக்கமாகச் சொல்லி விடுகிறார் இரண்டாம் பாகத்தில்.

உண்மைக் கதையின் நாயகன் பரிதாலா  ரவி இதில் பிரதாப் ரவியாகப் (விவேக் ஓபராய்) பெயர் மாற்றம் பெற்றிருக்கிறார். அவருடைய எதிராளி சூரி, சூர்யா (சூர்யா)  என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படுகிறார்.
இவர்களின் பகையின் முழு விவரம்  அறிய  உண்மைத் தமிழன் அவர்கள் எழுதிய இந்த பதிவை வாசிக்கவும்:
http://truetamilans.blogspot.com/2010/12/blog-post_06.html

பரிதாலா ரவி ஆந்திர அரசியலில் ஒரு முக்கியப் புள்ளியாக இருந்தவர். அவருடைய தந்தை  ஒரு பண்ணையாரிடம் மேலாளர் வேலை பார்த்தாலும்  நக்சல் போராளிகளுடன் சேர்ந்து  தொழிலாளர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் பண்ணையார்களால் கொல்லப்படுகிறார். பின்னர் பரிதாலா  ரவியின் அண்ணன் நக்சல் இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டதால் காவல் துறையால் என்கவுண்டரில் கொல்லப்படுகிறார். 

இவ்வளவு நாள் அமைதியாக இருந்த பரிதாலா ரவி நக்சல் இயக்கத்தில் சேர்கிறார். நக்சல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ரவிக்கு உதவுவதற்காக அவருடைய  தந்தை வேலை செய்த  பண்ணையார்  மற்றும் சட்டசபை உறுப்பினரான கங்குல நாராயண ரெட்டியைக்  கொல்கின்றனர். இவருடைய மகன்தான் சூரி எனப்படும் சூர்ய நாராயண ரெட்டி.  கங்குல நாராயண ரெட்டி கொலை செய்யப்பட்டபின் அவருடைய ஆதரவாளர்கள் பலரைப் பரிதாலா ரவியின் ஆதரவாளர்கள் பரலோகம் அனுப்பினர். இதற்குப் பயந்து மகன் சூரி கர்நாடகா செல்கிறார். சூரி மீது சில கற்பழிப்பு புகார்களும் உண்டு. இந்த அழித்தொழித்தல் பணியில் சூரியின் ஆட்களும் அவ்வப்போது ரவிக்குப் பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தனர். ஒருமுறை ரவியின் ஆட்கள் சூரியின் வீட்டு TV பழுதானபோது அதைச் சரி செய்ய வெளியே கொடுத்திருந்தபோது அதில் ரிமோட் கண்ட்ரோல் குண்டை வைத்து அனுப்பி விடுகின்றனர். சூரி மனைவியோடு வீட்டுக்கு வெளியிலிருந்ததால் தப்பித்து விடுகிறார். அவருடைய மற்ற குடும்ப உறுப்பினர்கள் மாண்டு போகின்றனர். இதற்குப்  பழி வாங்குவதற்காக ரவியைக் கொல்ல சூரி முயல்வதும் பல தோல்விகளுக்குப் பின் அவர் வெற்றி அடைவதும்தான் உண்மைக் கதை. ரிமோட் கண்ட்ரோல் குண்டு சம்பவத்துக்குச் சில வருடங்கள் கழித்து  என்.டி.ராமராவ் அழைப்பின் பேரில் பரிதாலா ரவி அரசியலில் நுழைந்து அமைச்சராவது தனிக்கதை. 

ரத்த சரித்திரம் இரண்டாம் பாகத்தில் நான் காணும் குறைகள்:
(1) சூர்யாவை நாயகனாகக் காட்ட வேண்டுமென்பதற்காக உண்மைக் கதையில் சூரி மேலுள்ள கற்பழிப்பு புகார்கள், அராஜகங்கள் ஆகியவற்றை மறைத்து விட்டு கண்ணியமானவராகக்  காட்டியிருப்பது.
(2) சூரியின் அப்பா கங்குல நாராயண ரெட்டியை சிறிது நல்லவராகக் காட்ட முயற்சிப்பது. 


முதல் முறையாக இரு எதிர் நாயகர்களுக்கு இடையில்   நடக்கும் மோதல்களைப் பார்க்கலாம் என்றிருந்தேன். ராம் கோபால் வர்மா புண்ணியத்தில் அது வழக்கமான பழிவாங்கல் கதையாகி விட்டது.

விவேக் ஓபராயின்  நடிப்பு சூர்யாவை விட இயல்பாக இருந்தது. அவரின் மனைவியாக வரும் ராதிகா ஆப்தேவும் சிறப்பாக நடித்திருக்கிறார். பிரியா மணிக்கு அவ்வளவு வாய்ப்பில்லை இக்கதையில்.

இப்படத்தில் தரம்-சந்தீப்பின்  இசையும் பாடல் வரிகளும் மிகச் சிறப்பாக உள்ளன. குறிப்பாக கத்திகளின் சகவாசம், சாத்தானின் சூதாட்டம், கொல்லடா ஆகிய பாடல்கள் அருமை. இசையை ஒழுங்காக விளம்பரப் படுத்திருந்தாலே படம் வணிக ரீதியாக கொஞ்சம் சாதித்திருக்கும். பாடல்கள் பின்னணியில் ஒலிப்பது நல்ல உத்தி. வேறு இயக்குனர் எடுத்திருந்தால் பரிதாலா ரவி ஆடிப் பாடும்  ஒரு குத்துப் பாட்டு நிச்சயமாக இருந்திருக்கும்.

இப்படத்தின் வன்முறை பொறுக்க முடியாமல் சிலர் பாதி படத்திலேயே திரையரங்கிலிருந்து வெளியேறிவிட்டனர். உண்மைக் கதை இதை விட வன்முறை நிறைந்தது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை போலிருக்கிறது.

No comments:

Post a Comment