Monday, July 12, 2010

மதராசப்பட்டினம் - திரை விமர்சனம்


வெகு நாட்கள் கழித்து மனநிறைவை அளித்த திரைப்படம். பிறந்ததிலிருந்தே சென்னைவாசியான நான் இப்படத்தை மனதுக்கு மிக நெருக்கமாக உணர்ந்தேன்.

1944-47 வரையிலான காலகட்டத்தில் சென்னையில் ஒரு காதல் கதையை மிக அழகாகக் காட்டியுள்ளார் இயக்குனர் விஜய். படத்தில் சுதந்திரப் போராட்டமும் காண்பிக்கப் படுகிறது. ஆனால் படம் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியல்ல.

விளம்பரங்களை வித்தியாசமாக அமைத்து எதிர்பார்ப்புகளையும், சுவாரசியங்களையும் தூண்டி அதைப் பெரும்பாலும் பூர்த்தியும் செய்துள்ளார் இயக்குனர்.

டைட்டானிக், லகான் படங்களின் பாதிப்புகள் ஆங்காங்கே சிறிது தென்படுகிறது. ஆர்யா தேவையான அளவுக்கு நடித்துள்ளார். படத்தில் மனத்தைக் கவர்பவர் கதாநாயகியாக நடிக்கும் ஆங்கிலேயர் ஏமி ஜாக்சன் தான். இவர் தமிழுக்கு வாயசைத்துள்ளது நமது வழக்கமான தமிழ் கதாநாயகிகளை விட நன்றாகப் பொருந்துகிறது.

கூவம் நதியும், சென்னை நகரமும் எவ்வளவு அழகாக இருந்துள்ளது. சுதந்திரத்துக்குப் பின் நாம் அவற்றை எந்த அளவுக்கு சீர்கேட்டுக்கு உள்ளாக்கியுள்ளோம் என்பது தெளிவாகத் தெரிகிறது. சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ஒரு நதி இருந்தது என்பதற்கான சுவடுகளையே அழித்து விட்டோம்.

பக்கிங்காம் கால்வாய்,கூவம் நதி, சென்ட்ரல் ரயில் நிலையம், வால் டாக்ஸ் சாலை, எல்பின்ஸ்டன் திரையரங்கம், வண்ணாரப்பேட்டை, அந்த கால ட்ராம், ஸ்பென்சர் தற்போது இருக்குமிடத்தில் இருந்த பிரிட்டிஷ் கட்டிடம் எனப் பார்த்து பார்த்து இழைத்திருக்கிறார்கள். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு அற்புதம்.

ஏமி ஜாக்சன் ஆர்யாவிடம் காதலை வெளிப்படுத்த முயல்வது கவிதை. ஆர்யா ஆங்கிலம் கற்கும் கட்சிகள் நல்ல நகைச்சுவை. மறைந்த கொச்சின் ஹனீபாவும் தன பங்கைச் சிறப்பாக ஆற்றியுள்ளார்.

ஜி.வீ.பிரகாஷின் பின்னணி இசை சிறப்பாக உள்ளது. பூக்கள் பூக்கும் தருணம் பாடல் அருமை. வாம்மா துரையம்மா பாடல் உண்மையான சிங்காரச் சென்னையைக் காட்டுகிறது.

சில குறைகளும் இல்லாமல் இல்லை. இடைவேளைக்குப் பின் வரும் ஒரு டூயட்டை தவிர்த்திருக்கலாம். மேலும் வண்ணாரபேட்டை வட சென்னையின் முக்கிய பகுதி. அங்கிருக்கும் பிரத்யேக வட்டார வழக்குத் தமிழைப் பயன்படுத்தாமல் வழக்கமான பேச்சுத் தமிழையையே பயன்படுத்தியிருப்பது படத்தின் நம்பகத்தன்மையைக் குறைக்கிறது. ஆர்யாவின் உடை லகான் படத்தைப் போலவே அமைந்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். படத்தின் இடைவேளையே கிளைமாக்ஸ் போல தோற்றமளித்தது. அதன் பின் ஜெயம் படம் போல நீண்ட கிளைமாக்ஸ் ஆகிவிட்டார் இயக்குனர். இரண்டாம் பாதியில் எடிட்டிங்கில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.

தமிழ்த் திரையுலகம் ஆரோக்யமான பாதையில் பயணம் செய்வதற்கான அறிகுறிகள் மதராசப்பட்டினம் மற்றும் களவாணி படங்கள் மூலம் தெரிகிறது. அஜீத், விஜய் படங்கள் வெற்றி பெற்று அதைக் கெடுக்காமல் இருந்தால் சரி.

3 comments:

கவிதை காதலன் said...

நிச்சயமாய் பார்க்க வேண்டிய திரைப்படம்.

ரமேஷ் said...

நன்றாக இருக்கிறது உங்கள் விமர்சனம்...
எனது விமர்சனத்தையும் பாருங்கள்..

http://jagannathchennai.blogspot.com/2010/07/blog-post.html

Sweatha Sanjana said...

I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

Post a Comment