தூர்தர்ஷன் பொன்விழா காணும் இத்தருணத்தில் தூர்தர்ஷன் பற்றிய என் நினைவுகளின் தொகுப்பு:
தூர்தர்ஷன் எனக்கு முதன்முதலில் பரிச்சயமானது 1985 ஆம் ஆண்டில் எனக்கு நான்கு வயதிருக்கும்போது. அகத்தியர் படத்தை ஞாயிறு மாலை பார்த்த ஞாபகம். அன்று மதியம் பூவே பூச்சூடவா படத்துக்கு உறவினர்களோடு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது அகத்தியர் ஓடிக்கொண்டிருந்ததாக நினைவு.
அக்காலகட்டத்தில் என்னைக் கவர்ந்தவை ஹார்லிக்ஸ், காம்ப்ளான் விளம்பரங்கள். மேலும் பதிமூன்று வார தொடர்கள் தூர்தர்ஷனின் சிறப்பம்சம். கதை முடிகி்றதோ இல்லையோ பதிமூன்றாம் வாரம் நிறுத்திவிட்டுப் போய்க் கொண்டே இருப்பார்கள். எனக்கு நினைவில் நிற்பவை சிவசங்கரி எழுதி ரகுவரன் நடித்த இது ஒரு மனிதனின் கதை, மௌலியின் Flight 172, அமாவாசை IAS தொடர்கள், எஸ்.வீ. சேகரின் நம் குடும்பம், வண்ணக் கோலங்கள், பாலச்சந்தரின் ரயில் ஸ்நேகம் ஆகியவை. மேலும் பேபி ஷாலினியும், பேஞ்சோ என்ற பூதமாக ஒரு விரல் கிருஷ்ணாராவும் நடித்த ஒரு குழந்தைகள் தொடர் எனக்குப் பிடித்தமான ஒன்று. பஞ்சு, பட்டு, பீதாம்பரம், அப்புசாமி, சீதா பாட்டி நாடகங்கள், கிரேசி மோகன், கோவை அனுராதா நாடகங்களும் சிறப்பானவை. இவற்றில் மௌலியின் தூர்தர்ஷன் நாடகங்களும், எஸ்.வீ.சேகரின் தூர்தர்ஷன் நாடகங்களும் இப்போது குறுந்தகடுகளாகக் கிடைப்பது சிறப்பான விஷயம். கடைசியாக நான் விரும்பிப் பார்த்த தொடர் சுஜாதாவின் என் இனிய இயந்திரா.
வீட்டில் தொலைக்காட்சி இருந்தாலும் நண்பர்களோடு அவர்கள் வீடுகளில் கூடி உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்தது மறக்க முடியாத அனுபவங்கள்.
ராமாயணம் தொடர் 1987/ 1988 ஆண்டுகளில் ஒளிபரப்பப்பட்டபோது மொழி புரியாவிட்டாலும் கூட எவ்வளவு ஆவலுடன் பார்த்தோம் என்பதை இப்போது நினைத்தால் வியப்பாக இருக்கிறது.
மேலும் அப்போது பார்த்த Giant Robot, Invisible man, Non-stop nonsense ஆகிய ஆங்கிலத் தொடர்கள் என்றும் நினைவில் நிற்பவை.
ஒளியும், ஒளியும், ஞாயிறு மாலை தமிழ் படம், திரைமலர், ஞாயிறு மதியம் ஒளிபரப்பப்பட்ட விருதுத் திரைப்படங்கள், ஹிந்தி பாடல்கள் உடைய சித்ரஹார் ஆகியவையும் சிறப்பான நிகழ்ச்சிகள்.
1990 களின் தொடக்கத்தில் மெட்ரோ அலைவரிசை என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டபோது தூர்தர்ஷன் வணிகப்பாதைக்கு நகர்ந்தது. அதிலும் பல சிறப்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. அதில் மெட்ரோ ப்ரியா என்ற தொகுப்பாளினி இன்றைய பிரபலமான தொகுப்பளினிகளின் முன்னோடி. Super hit muqabla என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக இருந்தது.
ஜுனூன், அஜ்னபி, தர்த் ஆகிய தொடர்கள் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பப் பட்டாலும் சிறப்பான தொடர்கள். ஜுனூன் முடிவு என்ன ஆனது என்று இன்று வரை தெரியவில்லை.
மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு, தொலைக்காட்சியை வைத்துதான் துப்பு துலக்கப்பட்டதோ என்று எண்ணுமளவிற்கு அவ்வளவு பரபரப்பைக் கிளப்பியது.
அரசியல் தலைவர்கள் மறைவின்போது தூர்தர்ஷன் ஒரு வாரம் கடைபிடிக்கும்துக்கம் உலகப் பிரசித்தி பெற்றது. ஒரு முறை ஜெயகாந்தன் கூட என் வீட்டுக்குள் வந்து அழ உனக்கு யார் உரிமை கொடுத்தது என்று கேட்டார். இப்போதும் தூர்தர்ஷனில் இந்த நடைமுறைதான் கடைபிடிக்கப்படுகிறதா என்று தெரியவில்லை.
தூர்தர்ஷனில் கிரிக்கெட், ஒலிம்பிக் பார்த்ததும் இனிய அனுபவங்கள்.
அப்பொழுதிருந்த டி.வி. ஆன்டெனாக்கள் இப்போது எங்கு போயின என்பது வியப்பையளிக்கிறது. நெக்ரோபேண்ட் சொன்னது: எதிர்காலத்தில் வானத்தில் செல்வதெல்லாம் கம்பியில் செல்லும். கம்பியில் செல்வதெல்லாம் வானத்தில் செல்லும். தொலைக்காட்சி கம்பிக்கு வந்தது. தொலைபேசி காற்றுக்குப் போனது. நாம் ஒரு காலமாற்றத்தின் சாட்சிகளாக இருந்திருக்கிறோம்.
நான் பள்ளியில் படிக்கும்போது கண்மணிப் பூங்கா நிகழ்ச்சியில் பாரதி வேடம் போட்டுப் பங்கு பெற்றது என் முதலும், கடைசியுமான தொலைக்காட்சி அனுபவம். அந்நிகழ்ச்சி 1990 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு ஒரு வருடம் கழித்து 1991 ஆம் ஆண்டு பாரதியார் நினைவு தினத்தில்(Sep 11) ஒளிபரப்பப்பட்டது. என் பாட்டி அந்த நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் நிறைவேறாமலேயே இறந்து போனது ஒரு சோகமான நிகழ்வு.
1995 ஆம் ஆண்டு எங்கள் வீட்டுக்கு கேபிள் தொலைக்காட்சி வந்தபோது எங்களுக்கும் தூர்தர்ஷனுக்கும் இருந்த தொடர்பு அறுந்தது. ஆனால் மெகா சீரியல்களால் மூழ்கடிக்கப்பட்டு மூச்சு திணறும் நேரங்களில் தூர்தர்ஷனை நினைத்துப் பார்த்தால் ஆனந்தக் கண்ணீர் வருகிறது. தேவையான அளவுக்கு, தேவையான நேரங்களில் நிகழ்ச்சிகளை எப்படி ஒளிபரப்ப வேண்டுமென்பதை தனியார் தொலைக்காட்சிகள் தூர்தர்ஷனிடம்தான் பாடம் கற்க வேண்டும்.
இப்பொழுதும் எங்கள் வீட்டில் தூர்தர்ஷனைப் பற்றி பேசும்போது நம்ம டிடி என்று சொல்கிறார்கள். இந்தப் பெயரை எந்தத் தனியார் தொலைக்காட்சியாலும் பெற முடியுமா என்பது கேள்விக்குறியே.
Saturday, September 19, 2009
Subscribe to:
Posts (Atom)