Tuesday, June 9, 2009

மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி

மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பது எனக்குப் பிடித்த தி.மு.க வின் கோஷங்களில் ஒன்று. தி.மு.க என்றால் இன்றைய தி.மு.க அல்ல. அறிஞர் அண்ணா காலத்து தி.மு.க. ஒரு நாடு எப்படி ஆட்சி செய்யப்பட வேண்டுமென்பதற்கு தெளிவான இலக்கணத்தைக் கொடுத்த கோஷம்.

இதைப் புரிந்து கொள்வதற்கு முன் நாட்டுக்கும், தேசத்துக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். நாடு என்பதை ஆங்கிலத்தில் country என்றழைக்கலாம் பொதுவான கண்ணோட்டத்தில். தேசம் என்பது வடமொழியிலிருந்து வந்திருந்தாலும் அது ஆங்கிலத்தில் nation என்ற சொல்லுக்கு இணையானது.

தேசம் என்பது பெரும்பாலான மக்கள் மதத்தாலோ, மொழியாலோ, இனத்தாலோ ஒன்றுபட்டு வாழும் ஒரு நிலப்பரப்பு. மதத்தால் ஒன்றுபட்ட தேசங்களை விட மொழியால் ஒன்றுபட்ட தேசங்களுக்கு ஆயுள் அதிகம். காரணம் மதம் என்பது நம்பிக்கை சார்ந்தது. மொழி என்பது நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம் கூடவே வருவது பிறந்து சில ஆண்டுகளிலிருந்து. இதற்கு உதாரணமாக பாகிஸ்தான், வங்காளதேசத்தைக் குறிக்கலாம். இரு தேசங்களுக்கும் மதம் ஒன்றாக இருந்தாலும் மொழி அவர்களைப் பிரித்தது. இந்தியாவைக் கூட இன்றைய இந்து மதத்தால் இணைக்கப்பட்ட தேசம் என்று பாவிக்க முயன்றாலும் மதத்தால் உருவாக்கப்படும் அத்தகைய கட்டமைப்பு நெடுநாளைக்கு நீடிக்காது.

மதத்தால் ஒன்றுபட்ட தேசம் என்றால் இஸ்ரேல், பாகிஸ்தான் ஆகியவற்றை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். மொழியால் ஒன்றுபட்ட தேசங்கள் பிரான்சு, ஜெர்மனி ஆகியவை. இந்தியாவில் உள்ள மொழிவாரி மாநிலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேசமாகத் திகழத் தகுதி கொண்டவை.

நாடு என்பது அரசியல் காரணங்களுக்காக செயற்கையாக உருவாக்கப் பட்ட நிலப்பரப்பு. இந்தியா, ஐரோப்பிய யூனியன், முந்தைய சோவியத் ருஷ்யா ஆகியவை இதற்கு சிறந்த உதாரணம். இந்த கட்டமைப்பில் ஒவ்வொரு மாநிலத்துக்கோ அல்லது தேசத்துக்கோ உள்ள முக்கியத்துவத்தைப் பொறுத்து அக்கட்டமைப்பின் ஆயுள் அமையும். இதில் ஏதாவது ஒரு மாநிலமோ தேசமோ அடுத்த மாநிலத்தை அடக்கி ஆள முயன்றால் அது நாடு உடைவதற்கு வழிவகுக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை தான் ஒரு நாடு என்பதை ஒப்புக் கொள்ளாமல் இந்தி பேசும் ஒரு தேசமாகத் தன்னை மாற்றிக் கொள்ள முயற்சிப்பதே அதன் பிரச்சினை.

மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பது ஆட்சிமுறையைச் சிறப்பாக்கும் ஒரு தத்துவம். இம்முறையில் ராணுவம், பொருளாதாரம் போன்ற பொதுவான துறைகளை மட்டும் மத்திய அரசு நிர்வகிக்கும். கல்வி, சுகாதாரம், சட்டம் ஒழுங்கு, உள்கட்டமைப்பு போன்ற துறைகள் மாநிலம் அல்லது தேசத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். இது போன்ற கட்டமைப்பில் அனைத்து மாநிலங்களும் அல்லது தேசங்களும் பொதுவான நாணயத்தையும், மக்கள் தடையில்லாமல் பல்வேறு மாநிலங்கள் அல்லது தேசங்களுக்கிடையே சென்று வரும் அனுமதியைப் பெற்றிருப்பர். ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் அல்லது தேசங்களுக்கும் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு அந்த மாநிலத்தையோ அல்லது தேசத்தையோச் சார்ந்தவருக்குத்தான் முன்னுரிமை. மேலும் ஒவ்வொரு மாநிலத்தின் அல்லது தேசத்தின் வரி வருவாயை எப்படி செலவு செய்வது என்பது அம்மாநிலமே முடிவு செய்யலாம். இந்தியாவில் முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்தாத பீஹார், உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தமிழ்நாடு, கர்நாடகா போன்ற வளர்ச்சி பெற்ற மாநிலங்களின் வரி வருவாயில் பெரும் பங்கைச் சுருட்டி கொள்வது போன்றவை மாநில சுயாட்சி முறையில் நடக்காது. சிலர் இதற்கு சொல்வார்கள் பீஹாரின் இரும்பை வளத்தை நாம் பயன்படுத்தவில்லையா என்று. ஆனால் அதற்கு தமிழ்நாடு தகுந்த விலை கொடுத்துதான் அதை வாங்குகிறது. ஆனால் சோம்பேறித்தனமாக இருந்துவிட்டு வளர்ந்த மாநிலங்களின் வரி வருவாயில் பீஹார் போன்ற மாநிலங்கள் பெரும் பங்கு வாங்குவதை யாரும் கேட்க மாட்டார்கள்.

இந்தியா சுதந்திரம் பெற்றிருந்தபோது மாநிலங்களுக்கு சுயாட்சி அளிக்காமல் பெரும்பாலான அதிகாரங்களை மத்திய அரசிடம் கொடுத்ததனால் வந்த விளைவுகள் இவை.

ஐரோப்பிய யூனியன் 1980 களில் உருவானபோது இத்தகையக் குறைகளைக் களைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார்கள். அந்த கூட்டமைப்பில் ஒரு தேசத்துக்கு கூட்டமைப்பின் வெளியுறவுக் கொள்கை பிடிக்கவில்லை என்றால் அவர்கள் தங்களுக்கென தனி வெளியுறவுக் கொள்கை வைத்துக் கொள்ளலாம். இப்பொழுது ஐரோப்பா முழுவதுமே ஒரு நாடு போலத்தான் காட்சியளிக்கிறது. தடையில்லாமல் பல்வேறு தேசங்களுக்குச் சென்று வரும் வசதி, ஒரே நாணயமான யூரோ ஆகியவை மட்டும்தான் இத்தேசங்களை இணைக்கும் ஒரே காரணி. ஐரோப்பிய யூனியன் அங்கத்தினர்களும் ஒன்று சேர்ந்து ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த நாடாளுமன்றம் மிகவும் குறைந்த அதிகாரங்களைக் கொண்டது. அனைத்து அங்கத்தினர்களின் பொதுவான பிரச்சினைகள் மட்டும்தான் இங்கு விவாதிக்கப்படும்.

அமெரிக்காவும் தன்னுடைய பல்வேறு மாநிலங்களுக்கு பூரண சுயாட்சியை அளித்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி சட்டங்கள், வரி விகிதங்கள் கூட உண்டு.

இன்னும் சொல்லப்போனால் பிரித்தானியர்கள் நாட்டுக்கு சுதந்திரம் வழங்கப்போகும் சேதி கேட்டு (ஜின்னா, பாகிஸ்தான் பிரிவினையை கேட்டுக்கொண்டிருக்கும்போது) அன்றைய காங்கிரஸ் தலைவர் அபுல் கலாம் ஆசாத்(1946), இந்தியா சுதந்திரம் அடையுமானால் மாநிலங்களுக்கு சுயாட்சி முறையும் மத்தியில் கூட்டாட்சி முறையும் அமுல்படுத்துப்படும் என்று தெரிவித்தார்.இந்த அறிவிப்பைக் கண்ட ஜின்னா, இந்தியா மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்குமேயானால் நாங்கள் பாகிஸ்தான் பிரிவினையை கைவிடுகிறோம், இந்தியாவோடு இணைந்து இருக்கிறோம் என்று அறிக்கை வெளியிட்டார்.47ல் காங்கிரஸ் தலைவராக வந்த நேரு அபுல் கலாமுடைய மாநில சுயாட்சி என்ற வாதத்தை திரும்பப்பெற்று மத்தியில் அதிகாரங்கள் குவியும் என்றதால் ஜின்னா மீண்டும் பிரிவினையை கையிலெடுத்தார்.

அன்று அண்ணா கோரிய, உண்மையான, மாநில சுயாட்சி தத்துவம் என்பது வேறு. இன்று நேற்றாக கலைஞர் கோரும் மாநில சுயாட்சி தத்துவம் என்பது வேறு.கருணாநிதி ஐந்தாவது முறை முதல்வராயிருந்தும் மத்தியில் இருந்து பணத்தை மட்டும் தமிழகத்துக்கு கேட்டு பெரும் நடவடிக்கைகளையே மாநில சுயாட்சியாக நினைத்துக்கொண்டு பிரச்சாரம் செய்துவருகிறார். மாநிலத்தில் சுயாட்சி என்ற வாதம் உண்மையாக இருந்திருக்குமேயானால் வி.பி. சிங் ஆட்சி காலத்திலேயே அதை வலியுறுத்தியிருக்க முடியும். உண்மையாக வேண்டும் என்று நினைத்திருந்தால் இவருடைய ஐம்பது வருட அரசியல் வாழ்வில் என்றோ துவக்கி இதை செய்து முடித்திருக்க முடியும்.ஆனால் அதை செய்யவில்லை, செய்யவும் துணிய மாட்டார். காரணமாக நான் கருதுவது மாநிலத்தில் ஆட்சி இழந்தால் மத்தியில் தாவிக்கொள்ள அங்கு ஒரு முழு அதிகாரமுள்ள ஒரு அமைப்பு தேவை. அது மாநில சுயாட்சியில் கிடைக்காது.

முரசொலி மாறன் மாநில சுயாட்சி குறித்து ஒரு புத்தகம் எழுதினார்.மாநில சுயாட்சி அமல்படுத்தப்பட்டால் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் எழுந்தது போன்ற பிரிவினைவாத கோஷங்கள் எழாது. பாகிஸ்தான் பிரிவினை கூட தடுக்கப் பட்டிருக்கலாம்.ஆனால் தேசியக் கட்சிகள் எனச் சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ், பா.ஜ.க போன்ற கட்சிகள் வலுவாக உள்ளவரை நடைமுறைக்கு வர வாய்ப்பேயில்லை. இன்னும் சில தேர்தல்களில் மக்கள் மறுபடி ஒரு கட்சி ஆட்சியைக் கொண்டு வந்து விடுவார்கள் போலிருக்கிறது.இப்போது இருக்கும் மாநிலக் கட்சிகளை நம்பி சுயாட்சியை அமல்படுத்தினாலும் அது எந்த அளவிற்கு நன்றாக இருக்கும் என்று தெரியவில்லை. தெலுங்குதேசம், பிஜு ஜனதா தளம், ம.தி.மு.க போன்ற கட்சிகள் நிறைய உருவாக வேண்டும். எதிர்காலத்தில் சிறந்த மாநிலக் கட்சிகள் உருவானால் மாநில சுயாட்சி முறையை அமல்படுத்துவது நன்மை பயக்கும்.

8 comments:

R.K.Arun said...

Congratulation on your new blog. Looking to read more from you. My best wishes!

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

இது போல் நல்ல கட்டுரை எழுத வாழ்துக்கள்

Penti said...

என்னைப் பொறுத்த வரை மத்தியில் அதிக ஆட்சி அதிகாரங்கள் இருந்தாலும் சரி, மாநில அளவில் அதிக ஆட்சி அதிகாரங்கள் இருந்தாலும் சரி, கடைசியில் சில குடும்பங்கள் மட்டுமே தழைத்தோங்க இது வழி வகுக்கும். இந்தியாவிற்கு, ஏன் உலக அளவில் கூட மோஹந்தாஸரின் கிராம ஸ்வராஜ்யம் தான் சிறந்தது. கிராமம் என்று வந்துவிட்டால் மொத்தமாகவே குடும்பங்கள் அதிகம் இருக்காது.அதிலும் பஞ்சாயத்து முறை என்று வந்து விட்டால் ஊர் பெரியவர்கள் எல்லாம் நிர்வகிப்பதால் பெரும்பாலும் எல்லாருக்கும் அதிகாரம் இருக்கும். ஒரு குடும்பம் ஓங்கும் நிலை ஏற்படாது. ஒவ்வொரு மனிதனுக்கும் அதிகப்படியான அதிகாரமும் உண்மையான ஜநநாயகமும் அப்பொழுது தான் இருக்கும். மாநில சுயாட்சி என்பது மாநில அளவில் சில அதிகார வர்க்கத்தவரிடம் மாநிலம் முழுவதையும் குத்தகை கொடுப்பது போன்ற நிலையை தான் உருவாக்கும். இப்பொழுதே கிட்டத்தட்ட அப்படி தான் இருக்கிறது.

Jagannath said...

Thanks to Arun and Pradeep for your compliments.

Jagannath said...

@Karthik

நீங்கள் சொல்வது போன்ற அணுகுமுறையைத்தான் பஞ்சாயத்து ராஜ் என்ற பெயரில் ராஜீவ் காலத்தில் கொண்டு வர ஒரு திட்டம் கொண்டு வந்தார்கள். இன்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் என்ற பெயரில் ஒன்று இயங்குகிறது. ஆனால் அந்த அமைச்சகம் சில விளம்பரங்கள் கொடுத்ததைத் தவிர இது வரை என்ன செய்துள்ளது என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை. மாநில சுயாட்சியை அமல்படுத்தாமல் பஞ்சாயத்து ராஜ் முழுவீச்சில் நடைமுறைக்கு வர வாய்ப்பே இல்லை.

Penti said...

மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி, நமக்கு பிரதிநிதிகளாக அமைந்திருப்பது சுரண்டல் பேர்விழிகளே. ஆகையால் மத்தியில் அதிகாரம் இருந்தாலும் சரி, மாநில சுயாட்சி என்று வந்தாலும் சரி, தங்கள் அதிகாரத்தை விட்டுக் கொடுக்கும் நோக்கம் இவர்களுக்கு வரப் போவதில்லை. அரசியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டாலே இது போன்ற தீர்வுகள் பிறக்கும்.

Anonymous said...

manilathukku over suatchi thantha,,mullai periyar,,kavieri neer ,tamil nattukku kidaikkathu,,,paravayiellaiya????

Anonymous said...

thதமிழ் நாட்டு விடுதலை ஒன்றே தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் காக்கும்.
http://www.tamiltribune.com/independence

Post a Comment